வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் தொடர்பான கிரியா கரும விளக்கம்

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசிப் பொங்கலோடு தொடர்புடைய கிரியைகள் மிகவும் விரிவானவை. இவற்றை மிகவும் சுருக்கமான முறையில் இக்கட்டுரை விபரிக்கின்றது. பாக்குத்தெண்டல் தொடக்கம் பக்தஞானியர் பொங்கல் வரையான பத்தொன்பது நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன.

பாக்குத்தெண்டல்
பொங்கல் நடைபெறப் போகின்றதென்பதை உபகரிப்புக்காரருக்கும் பொதுமக்களுக்கும் புலப்படுத்தலே இதன் நோக்கமாகும். பொங்கலுக்கான அரசி, மடைக்கான பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், வளந்து ஆகியாம் பொருட்களை இப்பகுதியிலுள்ள பெரியார்கள் தொன்றுதொட்டு இன்று வரை வழங்கி வருகிறார்கள். இவர்களையே உபகரிப்புக்காரர் எனக் கூறுவர். இந்த உபகரிப்புக்காரரிடம் மஞ்சள், பாக்கு, வெற்றிலை எனப்வற்றைப் பெறுதலையே பாக்குத் தெண்டல் எனக் கூறுவர். இந்நிகழ்ச்சி பற்றிப் பூசாரியார் கோபியக் குடிமகனாருக்கு அறிவிப்பார். பொங்கல் நடைபெறுவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முந்திய திங்கட்கிழமை பாக்குத்தெண்டல் நடைபெறும்.

தீர்த்தமெடுத்தல்
பாக்குத்தெண்டிய எட்டாம்நாள் திங்கட்கிழமை தீர்த்தமெடுத்தல் நடைபெறும். அன்று இப்பகுதி மக்கள் விரத அனுட்டானங்களுடன் இருந்து பிற்பகல் ஒருமணியளவில் முள்ளியவளைக் காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கச் செல்லும் வைபவத்தில் கலந்து கொள்வர். பாக்குத்தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர். தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர். குடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் நீரால் நிறைந்துவிடும். நீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசனை புரிந்தபின் மாலை ஆறுமணியளவில் அங்கிருந்து புறப்படுவர். அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்ததக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தரிட்டு மாவிலைத் தோரணம் இட்டு, நிறைகுடம் வைத்து வரவேற்பர். இங்ஙனம் வரிசையதக வைக்கப்பட்ட நிறைகுடப் பந்தரில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டுவிநாயகர் ஆலயத்துக்குத் தீர்த்தக்குடம் விநாயகர் ஆலயத்தை அடைந்ததும் அங்கு விசேட பூசை நடைபெறும். இத்தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கறை மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். கடல்நீரில் விளக்கெரியும் அற்புதம் தொடர்ந்து ஏழு தினங்கள் காட்டுவிநாயகர் அம்மன் மண்டபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

நோற்புக்காரர்
அவர்கள் எட்டு நாட்களும் நோற்பு மண்டபத்திலேயே தங்கியிருப்பர். அங்கிருந்து கொண்டே பொங்கல் தொடர்பான தம் பணிகளை ஆற்றுவர். ஐயர் மட்டும் கோயிலில் தங்குவார்.

ஏழுநாட்கள் காட்டுவிநாயகர் ஆலயத்தில்

விளக்கேற்றிய திங்கள் இரவுபோல் அடுத்து வரும் புதன், வெள்ளி ஆகிய இரண்டு இரவுகளிலும் பழைய கும்பம் குலைக்கப்பட்டுப் புதிதாக வைக்கப்படும். மடை பரவி அம்மன் பூசனைகள் இடம்பெறும். சிலம்பு கூறல் காவியம் ஒவ்வொரு இரவும் தொடர்ந்து படிக்கப்படும். ஏழாவது நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும். இத்தினத்தில் காலையிலிருந்தே பெருந்திரளான பக்தர்கள் கூடுவர். தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி அர்ச்சனை செய்வித்து வழிபடுவர். இந்த இரவுதான் கண்ணகி அம்மன் இவ்வாலயத்தில் நடைபெறும் பொங்கல் மடையைக் கண்டு அடுத்தநாள் திங்கள் காலை வற்றாப்பளைக்குச் சென்றாள் என்பது ஐதீகம்.
காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் முடிவுற்றபின், அடுத்தநாள் திங்கள் இரவில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் நடைபெறும்.

மடைப்பண்டம்
பொங்கலுக்கும் மடைக்கும் உரிய பொருட்களைக் காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்தே கொண்டு செல்வர். இதனையே ஷஷமடைப்பண்டம் கொண்டு செல்லுதல்|| என்பர். மடைக்குரிய வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவும் பொங்கலுக்குரிய அரிசி, வளந்து என்பனவும் அம்மன் கும்பம் வைப்பதற்கான பொருள்கள், உப்புநீர் விளக்கு, தீரத்தக்குடம், அம்மன் பத்ததிச் சின்னங்கள் அடங்கிய பேழை ஆகிய இப்பண்டங்களை திங்கள் அதிகாலை ஐந்து மணியளவில் வற்றாப்பளைக்கு நோற்புக்காரர் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். பறைமேளம், சங்கு, சேமக்கலம் முதலிய வாத்தியங்களுடன் ஊர்வலம் செல்லும்.

கும்பம் வைத்தல்
முடைப்பண்டத்துடன் கொண்டுவரப்பட்ட கும்ப பாத்திரத்தையும் அதற்குரிய பொருள்களையும் வைத்தே கும்பம் வைக்கப்படும். கும்பம் வைக்கும் இடத்தை நீரால் சுத்திகரித்து அரிசியை வட்டாகப் பரவி அம்மன் மந்திரம் சொல்லி கும்பப் பாத்திரத்தை அதன்மேல் நிறுத்தி அதன்மீது தேங்காயை வைத்து மாவிலைக்குப் பதிலாக தென்னப்பாளை நெட்டுகளை வைத்து, அதன்மீது அம்மன் மகபடாம் வைக்கப்படும். கும்பத்திற்குப் பட்டுச்சாத்தி பூக்கள் இட்டு அம்மனைக் கும்பத்தில் ஆகாவனம் செய்வர். கடல்நீர் விளக்கு ஏற்றிவைக்கப்படும்.

கச்சுரேநரல்
மடைக்குரிய பொருள்களைப் பரவும் வெள்ளைத்துணியை நேருதலையே கச்சுநேருதல் என்பர். வெள்ளைத் துணியைக் கொய்து இரு கைகளாலும் அடக்கிப் பிடித்து நான்கு திக்கும் பார்த்துக் காவல் தெய்வங்களை வேண்டி நேருவர். பூசாரியார் உருவேற்றிய நிலையில் தேறர்றமளிப்பார்.

மடை பரவுதல்
வெள்ளைத்துணிமீது வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை என்பவற்றில் தலா ஆயிரம் பரவப்படும். இளநீரும், இளந்தென்னம் பாளையின் மலர்களும் மடையில் பரவப்படும்.

நூல் சுற்றுதல்
பொங்கலுக்குரிய அம்மன் வளந்திற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நூல் சுற்றப்படும். மற்ற இரண்டு வளந்திற்கும் நூல் சுற்றுவதில்லை. பின்னர் வளந்து நேரல் இடம்பெறும். கும்பம் வைத்தல், மடை பரவுதல், பொங்குதல், படைத்தல், கட்டாடுதல், வேளை விபூதி, மஞ்சட் காப்பு அடியார்க்கு அளித்தல் ஆதியாம் கருமங்களைப் பிராமணர் அல்லாத கட்டாடி உடையாரே செய்வர். கட்டு ஆடி சொல்கின்றதால் இவர் இப்பெயரைப் பெற்றார்.

வளந்து நேரல்
அம்மன் வளந்தினை பூசாரியார் எடுத்துச் சென்று அம்மன் முன்னிலையில் அம்மனை வணங்கி, அட்டதிக்குப் பாலகர்களையும், தேவாதி தேவர்களையும் வேண்டி நிற்பர். எட்டுத் திசைகளிலும் வளந்தினை எறிந்து ஏந்துவர். கட்டாடி உடையார் உருவேறி ஆடுவர். பொங்கல் இனிது நிறைவேற தேவாதி தேவர்களை வேண்டுவதையே வளந்து நேர்தல் என அழைக்கப்படும். மூன்று வளந்துகளை அடுப்பில் ஏற்றிப் பச்சை அரிசியும், பசுப்பாலும் சேர்த்துப் பொங்கில் நடைபெறும். சர்க்கரை சேர்ப்பதில்லை.

தூளி பிடித்தல்
சலவைத் தொழிலாளர் இருவர் வெள்ளைத் துணியைப் பிடிக்கப் பூசாரியார் அம்மன் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு அம்மனின் சின்னங்களான சிலம்பு, பிரம்பு, அம்மனைக்காய் என்பவற்றை வைப்பர். அத்துணியில் 11 பாக்கு, 11 வெற்றிலை ஆதியாம் பொருட்களை வைத்துப் பூசித்துச் சிலம்பினை எடுத்துக் குலுக்கி நான்கு திக்கும் பாக்குடன் கூடிய வெற்றிலைச் சுருளை தூளியின் மறுபுறத்தே வீசுவார். இதுபோலவே எரியும் திரியையும் தூளியின் மேலால் எறிவார்.

திருக்குளரித்தி பாடுதல்
ஏட்டிலுள்ள அம்மன் திருக்குளிர்த்தி தன்னைப் பூசாரியாரும் அதற்குரியோரும் பாடுவர். அம்மனின் உள்ளத்தைக் குளிர்விப்பதால் அவளின் அருளைப் பெற்றுக் கொள்ளலாம் என எண்ணியே திருக்குளிர்த்தி பாடப்படுகின்றது. குளிர்த்தி பாடி முடிந்ததும் அம்மானைப் பாட்டுப் பாடப்படும். அங்ஙனம் பாடும்போது பூசாரியார் வெள்ளி புனைந்த மூன்று சித்தரக்காய்களை மேலே எறிந்து ஏந்துவர்.

கதிர்காம யாத்திரை ஆரம்பம்
கதிர்காம யாத்திரிகர்கள் அம்மனிடம் யாத்திரைக்கு விடைகிடைக்கப் பெற்றவர்கள். அம்மனை வழிபட்டுப் பிரசாதங்களைப் பெற்றதும் தமது யாத்திரையை ஆலயத்தின் உள்வீதியிலேயே தொடங்குவர். வேல் தாங்கிய தலைமை அடியார் கந்தப்பெருமானின் நாம வழிபாடல்களை இசையொழுகப் பாடி முன்செல்ல ஏனைய அடியார்கள் பாடிக்கொண்டு பின் செல்வார்கள்.

பக்தஞானி பொங்கல்
தஞ்சாவூரிலிருந்து பக்தஞானியும் அவரின் சிஷ;யர்களும் இங்குவந்து பொங்கல் கிரியைகளில் பல ஒழுங்கு முறைகளையும் மரபுகளையும் ஏற்படுத்தினர். அம்மன் சின்னங்களான முகவடாம், உடுக்கு, சிலம்பு, பிரம்பு, ஏட்டுப் பிரதிகள் ஆகியவற்றையும் அவரே வழங்கினார். இவரை நினைவு கூர்தற் பொருட்டு அவர் நற்கதியடைந்த இடத்தில் வற்றாப்பளைப் பொங்கலை அடுத்த வெள்ளிக்கிழமை பொங்கல் நiபெறும். இப்பொங்கல் முள்ளியவளையிலுள்ள நாவற்காட்டில் இடம் பெறும்.

இத்துடன் பொங்கல் கிரியைகள் யாவும் நிறைவுறும்.

 

Copyright © 2010 Vattrapalai Kovil. All Rights Reserved.